இலங்கை அகதிகளை இடமாற்றம் செய்யும் தமிழக அரசு உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா வேடர் காலனியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் ஜெயசித்ரா, நந்தகுமார், மடுஜித் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் 1990ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்து இந்த முகாமில் 20 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் வசித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களை திடீரென்று வேறு இடத்துக்கு மாற்றும்படி மறுவாழ்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.
கோவை மாவட்ட ஆட்சியர், க்யூ பிராஞ்ச் காவல்துறை அளித்த பரிந்துரைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அந்த உத்தரவில் மறுவாழ்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் மாற்றப்பட வேண்டிய காரணத்தை அவர் அதில் சொல்லவில்லை.
இந்த உத்தரவின் அடிப்படையில் எங்களது பெயர்ப்பதிவு ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட சலுகைகளை பெற முடியாமல் போய்விட்டது. 20 ஆண்டுகளாக தங்கி இருந்து எங்கள் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கும் பெருத்த இடையூறு ஏற்படுகிறது.
எங்களை இடமாற்றம் செய்யும் இயக்குனரின் உத்தரவு, மனித உரிமைகளுக்கும், அரசியல் சாசன விதிகளுக்கும் முரணானது. எனவே அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், மறுவாழ்வுத்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் மனுவுக்கான பதில் மனுவை வரும் 12ஆம் தேதி (12-01-10) தாக்கல் செய்யும்படி மறுவாழ்வுத்துறை இயக்குனர், கோவை மாவட்ட ஆட்சியர், க்யூ பிராஞ்ச் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தாக்கீது அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Courtesy
inioru
சூரியனுக்கு ஒரு பொங்கல்
14 years ago