Sunday, May 18, 2008

Voice of Tamil Refugee

Voice of Tamil Refugee


தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?-
பாரதியார் -
அகதியின் வேண்டுகோள்............!

(05/10/2007) பி.ஜே.பி. கட்சியினர், இலங்கையில் போராட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்காக மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். சேகரித்த பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைத்து அனுப்ப முடிவு செய்துள்ளனர்.புதிய தமிழகம் கட்சியினரும் இப்பணிக்காக களத்தில் இறங்கியுள்ளனர். பழ.நெடுமாறன் இப்பணிகளை தொடக்கி வைத்துள்ளதுடன், மற்றகட்சிகளையும் இப்பணிக்காக அழைப்பு விடுத்துள்ளார்.

இராமர் பாலம் கற்பனை / கற்பனையல்லாதது அதுபற்றி விவாதிக்க வரவில்லை. இராமர் சேது பாலத்தை தகர்க்காதே என்ற போராட்டங்ளுக்கு மத்தியில் இலங்கைத்தமிழர்கள் மீது நடக்கும் காட்டுமிராண்டித்தன யுத்தத்தை நிறுத்து என்று யாரும் களமிறங்கி போராடமாட்டார்களா என்று இலங்கைத்தமிழர்களின் ஏக்கம் தேங்கிக்கிடக்கிறது.

எது எப்படியோ மீண்டும் ஈழத்தமிழர்களின் தலைகள் பகடைக்காய்களாய் உருட்டப்பட்டிருக்கின்றன. சந்தர்ப்பவாதங்களை மட்டுமே பயன்படுத்தி அரசியல் நடத்துகிற பி. ஜே.பி. கட்சிளைப் போன்றவர்கள் எதையாவது செய்து பத்திரிகைளில் வந்தால்தான் மக்கள் மறக்கமாட்டார்கள் என்று சாதரண மனிதன் கூறுகிற வார்த்தைகளிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. இதுபோன்ற அரசியல் தந்திரங்களுக்கு மத்தியில் திராவிட, பெரியாரிய மற்றும் மார்க்சிய கட்சிகள் ஈழத்தமிழர்கள் மீதான அக்கறை மிக உன்னிப்பாக கவனம் எடுக்க வேண்டிய தேவையும் உள்ளது.

சிங்கள இராணுவம் பாரிய குண்டுகளால் ஆயிரமாயிரமாய் தமிழர்களை சிதைத்து கொன்று குவிக்கின்ற போதும், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கடல்வழியாக தப்பி வரும்போதும் பிணங்களாய் கரையில் ஒதுங்கிற போதும், இதே தமிழக மண்ணில் வேலைவாய்ப்பற்று முகங்களை தொலைத்துக்கொண்டு அகதிமுகாம்களில் வாழுகின்ற அகதிகளின் நிலை தொடர்கதையாக இருக்கிறபோது இந்திய அரசாங்கம் முகத்தை திருப்பியே வைத்துக்கொண்டிருக்கின்றது. அகதிஅந்தஸ்த்தை கொடுக்க மறுத்து வருகிறது. அணு ஒப்பந்தம், வர்த்தக ஒப்பந்தம் என வணிகம் சார்ந்த ஒப்பந்தங்களில் கையெழுத்து போட துடிக்கிற இந்தியா இதில்மட்டும் மறுத்துள்ளது. கூண்டுக் கிளியைப்போல் அகதி அகதிக்காக போராட முடியாத நிலைவேறு கானப்படுகிறது. இதற்காக யார் போராடினால் கிடைக்கும்?

இறந்த காலத்தில் நடந்த கசப்பான அனுவங்களால் நிகழ்காலத்தில் இருக்கும் அகதிகள், அவர்கள் சார்ந்த சந்ததிகள் மீதான வாழ்க்கைகள் எல்லாமே போராட்ட களங்களாக தேங்கிக்கொண்டிருக்கின்றன என்பது மட்டும் நிஜமாக கிடக்கிறது.

பி.ஜே.பி. இலங்கைத்தமிழர்களுக்காக திடீர் களமிறங்கியிருக்கிறதென்றால் இது வெறும் அரசியல் தந்திரம் மட்டுமின்றி நீண்ட கால நோக்கத்துடனான உண்மையும் ஒலிந்திருக்கிறது.

இலங்கையில் மூடநம்பிக்கைகள் கடவுள் நம்பிக்கைகளுக்கு மேலாக வளர்ச்சி பெற்று வருகின்றன. சாமியார்களும், கோயில் பூசாரிகளும் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் காவலர்களாக உள்ளார்கள். செய்வினை சூனியம், பேய் விரட்டல், குறி சொல்லல், உரு வருதல் மட்டுமின்றி நடுச்சாமத்தில் அம்மனமாய் நாற்சந்திக்கு வருகிற மந்திரக்காரர்களும் இருக்கிறார்கள்.

இராணுவத்தாக்குதலினால் உயிருக்கு பயந்த போராட்டத்தில் வாழ்கிற மனிதர்களின் மனநிலை ஏறக்குறைய சிதைந்த நிலையில்தான் இருக்கும். அந்த பயத்தினை மேலும் அதிகரித்து ஒருபுறம் வியாபாரமும் நடக்கிறது. இராணுவ முகாம்களில் பல்வேறுபட்ட உயிரை வதைக்கிற சித்திரவதைகளை அனுபவித்துவிட்டு வருகிறவர்கள் இரவுகளில் அந்த வேதனையின் வலிகள் அவர்களின் தூக்கத்தினையும் மீறி அலற வைத்துவிடுகின்றன. அவனுக்கு அல்லது அவளுக்கு பேய் பிடித்துவிட்டது அல்லது சூனியம் செய்து வைத்துவிட்டார்கள் என்று அடுத்த கட்ட காரியத்தில் இறங்கி விடுகிறார்கள்.தெருமுனையில் சுட்டுக்கொன்ற மனிதனின் ஆவி அந்த மரத்தில் நிற்பதாகவும் யாரோ அதைப்பார்த்ததாகவும் என அதிகமான பயத்தை உண்டுபண்ணக்கூடிய கதைகள் நிறையவே புழக்கத்தில் உள்ளன. சிறைக்குள் நடக்கும் சித்திரவதைகள், கண்ணெதிரே சுட்டுக்கொல்லப்படுகிற காட்சிகள் என பயமே மிச்சமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இலங்கைத்தமிழர்கள். இதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெறுபவர்கள் யாராக இருப்பர் ? விடை புரிந்திருக்கும்.

மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளை கவனத்தில் எடுத்துப்பார்த்தால் எதுமாதிரியான கட்சிகள் அங்கு வேறுன்றி போராட்டங்களை திசைதிருப்ப இருக்கிறது என்பதையும், எந்த தலைமைகளுக்கு ஈழத்தமிழர்களின் விடுதலைமீது தார்மீக கடமையுள்ளது என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.தமிழக மற்றும் இந்திய அரசாங்கத்திடமும், தமிழக மக்களிடமும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வதெல்லாம் தேன்கூடு சிதைந்த தேனிக்களாய் நாடு பிரிந்து வாழ்கிற ஈழத்தமிழர்கள் நிம்மதியாய் ஒன்றாய் வாழ மனிதாபிமானத்துடன் ஒன்றுகூடி போராடுங்கள் என்பதேயாகும்.

No comments: